சென்னை மெரினாவில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - கைது

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை மெரினாவில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் - கைது
Published on

சென்னை,

'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த 26ம் தேதி மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தை முற்று கையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து மாலை விடுவித்தனர். இரண்டாவது நாளாக 27-ந்தேதி, சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து மாலை விடுவித்தனர்.

மூன்றாம் நாளாக நேற்று சென்னை பிராட்வேயில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு, நுழைவு வாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில், சென்னை மெரினா சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இன்று 4-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோது, போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைதுசெய்தனர்.

எனினும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் மெரினா கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. அத்துடன், போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com