

தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு நேற்று மாலை தூத்துக்குடிக்கு வந்தார்.
அவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள அலுவலர்களுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். தூத்துக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான லட்சுமிபதி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் பேசிய தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, "தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கிறது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்னர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கும் முழுமையான பயிற்சி வழங்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சுற்றிலும் சரியான எண்ணிக்கையை தவறில்லாமல் உடனுக்குடன் அதற்கான செயலியில் பதிவு செய்து முடிக்க வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகம் ஆகியவற்றை தொடர்பு கொள்வதற்கு சிறந்த தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி பணியை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளன்று வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.