தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு எதிரொலியாக தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
Published on

சென்னை,

கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டுவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு இந்திய கடல் பகுதியில் ராமேசுவரம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்ததுடன் மிருகத்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரது படகில் சென்ற கெம்பலோத் என்பவரது மகன் பிரிஜ்ஜோ (வயது 21) என்ற மீனவர் குண்டு பாய்ந்து பலியானார். அவரது கழுத்தில் குண்டு பாய்ந்து இருந்தது. இதே போல் கிளிண்டன் என்ற மீனவர் குண்டுக்காயம் அடைந்தார். இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அலறித்துடித்தனர், பின்னர் உயிரை காத்துக் கொள்ள கரை திரும்பினர்.

ராமேசுவரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ராமேசுவரம் மருத்துவமனை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படை தமிழக மீனவர்களை பாதுகாக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மீனவ அமைப்புகள் தரப்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையின் அடாவடியால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

வன்முறை ஏற்படாமல் தடுக்க, தமிழகத்தில் உள்ள இலங்கை துணை தூதரகம், இலங்கை வங்கிகள், சென்னை எழும்பூரில் உள்ள புத்தக விஹார் ஆகிய நிறுவனங்களுக்கு தமிழக போலீஸ் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com