

சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் காங்கிரஸ் ஆதரவோடு இன்று முதல்-அமைச்சராக பதவியேற்பதாக இருந்தது. கவர்னரை சந்தித்தும் அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பட்டியலை விஜய் கொடுக்காததால் கவர்னர் அவரை பதவியேற்க அழைக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தி.மு.க. ஆதரவோடு அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதாக நேற்று இரவு தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, விஜய்க்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டது. திடீரென நேற்று இரவு 10.30 மணியளவில் அவரது கான்வாய் பாதுகாப்பில் மாற்றம் செய்யப்பட்டது. பட்டினப்பாக்கம் வீட்டில் விஜய் இருக்கும் போது அவருக்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்கள் திடீரென வாபஸ் பெறப்பட்டது.
விஜய் வீட்டில் இருந்து கான்வாய் வாகனங்கள் தனியாக புறப்பட்டு சென்றன. விஜய்யும் கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் இல்லாமலேயே தனியாக அவரது காரில் நீலாங்கரை வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் கேட்டபோது, விஜய் கேட்டுக்கொண்டதன் பேரில் கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் திருப்பி அழைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் விஜய் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பாதுகாப்புகள் இன்று முழுமையாக அகற்றப்பட்டது. மேலும் விஜய் வீட்டில் வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் வாயிலும் திரும்ப எடுத்துச்செல்லப்பட்டது. முன்னதாக சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பு நேற்றுவரை நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விஜய்க்கான அனைத்து பாதுகாப்புகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளதால், விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் திடீர் அமைதி காணப்படுகிறது.