

சென்னை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகியுள்ள நிலையில், அதிக மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் 4399 இடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்காக தமிழகம் முழுவதும் 7,327 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.