

சென்னை,
சேலம் மற்றும் கேரள மாநிலம் கொச்சியை இணைக்கும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 20-ந்தேதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த கோர சம்பவம், தமிழகத்தில் சாலைகள் மோசமாக, பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை மீண்டும் ஒரு முறை பிரதிபலிக்கிறது. சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் தமிழகத்தில்தான் அதிகம் நிகழ்கின்றன.
அதிவேக சாலைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அலட்சியம் காட்டாமல் இருந்திருந்தால், இந்த விபத்தை தடுத்திருக்கலாம். அதிகம் பேர் பயணம் செய்யும் மற்றும் வர்த்தக வழித்தடமாக விளங்கும் இந்த 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் சாலைகளுக்கு இடையேயான தடுப்பு சுவரின் உயரம் மிகவும் குறைவாக வைக்கப்பட்டிருப்பது போதுமானதா? என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சிந்தித்து பார்க்கவேண்டும்.
முறையான பாதுகாப்பு அம்சங்களை மேற்கொண்டிருந்தால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத இந்த கோர விபத்தை தவிர்த்திருக்கலாம். ஆண்டுக்கு ஆண்டு சாலைகள் பரிதாபகரமான நிலைக்கு சென்றபோதும், அதனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்பது இல்லை. சுங்க கட்டணம் மற்றும் வரிகளை அதிகமாக வசூலித்த பிறகும், அரசு முறையான பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யாததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நடக்காதவாறு முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதே, சாலை விபத்தில் பலியானவர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகவும், மரணங்களுக்கு பரிகாரமாகவும் இருக்கும். நீண்ட விபத்து பட்டியலில் இன்னும் ஒரு விபத்து இடம் பெறுவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எனவே அனைத்து நெடுஞ்சாலைகளிலும் போர்க்கால அடிப்படையில் சாலை தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.