

திருச்சி,
திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சட்டசபை கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது இது உள்ளக்கத்தோடு நடந்துள்ளதா என கேள்வி எழுகிறது. இதற்குப் பொறுப்புள்ள அதிகாரிகளும், அமைச்சர்களும் உரிய விளக்கத்தை அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இனி வரும் காலங்களில் அது போன்ற பிழைகள் நடைபெறாத வகையில் பார்த்து கொள்ள வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது ஏற்புடையதல்ல; இதுவரை வழங்கி வந்த பாதுகாப்பை அவருக்கு வழங்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
தவெக தலைமையிலான இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தலித் மக்களுக்கு இன்னும் பல சட்டப்பூர்வ உரிமைகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன. குறிப்பாக, வன்கொடுமை தடுப்புச் சட்டம் இந்தியா முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அதிகாரிகளின் கருத்துக்களால் பல நல்ல திட்டங்கள் முடங்குகின்றன. ஆட்சியாளர்கள் விரும்பினாலும் அதிகாரிகள் சில இடங்களில் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியாக, தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அரசு செய்ய வேண்டிய அவசியமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் உரிய தீர்வுகளைப் பெற விசிக தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.