தமிழக-புதுச்சேரி கடலோரங்களில் மரம் வளர்ப்பை அதிகரிக்க ஹெலிகாப்டர்கள் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி

தமிழக-புதுச்சேரி கடலோரங்களில் மரம் வளர்ப்பை அதிகரிக்க ஹெலிகாப்டர்கள் முலம் விதைப்பந்துகள் தூவும் பணி உச்சிப்புளி ஐ.என்.எஸ். கடற்படை விமான தளத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழக-புதுச்சேரி கடலோரங்களில் மரம் வளர்ப்பை அதிகரிக்க ஹெலிகாப்டர்கள் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி
Published on

விதைப்பந்துகள் தூவும் பணி

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளம் அமைந்துள்ளது. அங்குள்ள ஹலிகாப்டர்கள் கடல் பகுதியில் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

உச்சிப்புளி ஐ.என்.எஸ். தளம் மற்றும் ராமநாதபுரம் வனத்துறை, மாதா அமிர்தானந்தமயி மடம் இணைந்து கடலோர கிராமங்களில் மரங்கள் வளர்ப்பை அதிகப்படுத்த விதை பந்துகள் தூவுவதற்கான ஏற்பாடுகள் சய்திருந்தன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி உச்சிப்புளி தளத்தில் நடைபெற்றது.

தமிழக-புதுச்சேரி பிராந்திய கடற்படை அதிகாரி ரவிக்குமார் திங்ராவிடம் விதைப்பந்துகளை, அமிர்தானந்தமயி மடத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணா நந்தாபுரி வழங்கினார்.

தொடங்கி வைப்பு

விதை பந்துகள் அனைத்தும் பெட்டிகளில் பேக்கிங் செய்யப்பட்டு, ஓடுதள பாதையில் நிறுத்தி இருந்த 2 ஹெலிகாப்டர்களில் கடற்படை வீரர்கள் மூலம் ஏற்றப்பட்டன. அந்த ஹெலிகாப்டர்களை பிராந்திய கடற்படை அதிகாரி ரவிக்குமார் திங்ரா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உச்சிப்புளி ஐ.என்.எஸ். தள அதிகாரி விக்ராந்த் சப்னிஸ், அமிர்தானந்தமயி மடத்தைச் சேர்ந்த பிரம்மச்சாரினி பவானி, மாத்ருகிருபா மிருதசைதன்யா, லட்சுமி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுமன், கோபு, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டியன், சமூக ஆர்வலர் சுடலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதுமையான முயற்சி

பின்னர் பிராந்திய கடற்படை அதிகாரி ரவிக்குமார் திங்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மரங்கள் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் மாதா அமிர்தானந்தமயி மையம் நல்ல முயற்சி எடுத்துள்ளது. 4 லட்சம் விதைப்பந்துகளை ஒப்படைத்துள்ளனர். இந்த விதைப்பந்துகள் தமிழக கடலோர கிராமங்கள் முழுவதும், மழை சீசன் தொடங்குவதற்கு முன்பாக தூவப்படும். ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்துகள் தூவுவது புதுமையான முயற்சி. இதில் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளம் முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த கட்டமாக புதுச்சேரி மாநில கடற்கரையிலும் விதைப்பந்துகள் தூவுவதற்கான திட்டமும் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமிர்தானந்தமயி மடத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணா நந்தாபுரி கூறும்போது, "1 கோடி விதைப்பந்துகள் தூவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்காக பல மாநிலங்களுக்கு விதைப்பந்துகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. தமிழகம்-புதுச்சேரி கடற்கரையோர கிராமங்களில் மட்டும் 5 லட்சம் விதைப்பந்துகள் தூவப்பட உள்ளன" என்று கூறினார்.

இன்று 2 ஹெலிகாப்டர்கள் பாம்பன் சின்னப்பாலம், குந்துகால், நடராஜபுரம், சுனாமி குடியிருப்பு உள்ளிட்ட, கடற்கரையோர கிராமங்களில் விதைப்பந்துகளை தூவின. இன்று மட்டும் 40 ஆயிரம் விதைப்பந்துகள் தூவப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com