மாடு, மரங்களை தொடர்ந்து மலைகளுடன் பேச தயாராகும் சீமான்!

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டம் ஒன்றில் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிகிறது.
மாடு, மரங்களை தொடர்ந்து மலைகளுடன் பேச தயாராகும் சீமான்!
Published on

சென்னை,

திரைப்பட இயக்குனரும், நடிகருமான சீமான், 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் அவர், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் 1.1 ஆக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம், கடைசியாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் (2024) 8.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவதாக அவர் கூறியிருக்கிறார். சீமானின் மேடைப் பேச்சு இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவ்வப்போது மாநாடுகளை நடத்தி வரும் அவர், தற்போது இயற்கை வளங்களையும், வாயில்லா ஜீவராசிகளையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகிறார்.

அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி மதுரையில் மாடுகள் மாநாட்டினையும், ஆகஸ்டு 30-ந் தேதி திருவள்ளூரில் மரங்களின் மாநாட்டினையும் சீமான் நடத்தினார். அவரது இந்த செயல், இயற்கை மற்றும் விலங்குகள் ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது, மலைகளும், நீர்நிலைகளும் ஆக்கிரமிப்புகளின் பிடியில் அழிக்கப்பட்டுவருவதை தொடர்ந்து, அவைகளை காப்பாற்றும் வகையில் மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில், மலைகளுக்கான மாநாட்டை சீமான் நடத்த இருக்கிறார். அனேகமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டம் ஒன்றில் இந்த மாநாடு நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கான இடத்தேர்வு நடைபெற்று வருகிறது. மலைகளின் மாநாட்டினை தொடர்ந்து, தண்ணீர் மாநாடும் நடத்தப்பட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com