அறச்சலூரில் தனியார் சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

அறச்சலூரில் தனியார் சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
அறச்சலூரில் தனியார் சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
Published on

அறச்சலூர்

அறச்சலூர் சில்லாங்காட்டுபுதூரில் தனியார் சர்க்கரை ஆலை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மூலம் அறச்சலூர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளிடம் ஒப்பந்த அடிப்படையில் கரும்புகள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தினம்தோறும் சுமார் 700 டன் அளவில் கரும்புகள் வெட்டப்பட்டு கரூரில் உள்ள சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் அறச்சலூர் சில்லாங்காட்டுபுதூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறந்ததும் சர்க்கரை ஆலையின் துணை பொது மேலாளர் பார்த்திபன் மற்றும் நிர்வாகத்தினர், அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போரட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆலை நிர்வாகத்தினர், போலீசாரிடம் விவசாயிகள் கூறுகையில், 'விரைவில் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. அவ்வாறு தண்ணீர் திறக்கப்பட்டால் கரும்பு தோட்டத்தில் தண்ணீர் தேங்கும். இதனால் தற்போது அறுவடை நிலையில் உள்ள கரும்புகளை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்படும். இதன்காரணமாக விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே ஆலை நிர்வாகத்தினர் உடனடியாக கரும்பை அறுவடை செய்ய வேண்டும்,' என்றனர். அதற்கு பதில் அளித்த ஆலை நிர்வாகத்தினர், 'தோட்டத்தை பார்வையிட்டு இன்னும் 2 வாரத்துக்குள் ஒப்பந்த அடிப்படையில் பதிவு செய்த விவசாயிகளின் கரும்புகள் அறுவடை செய்யப்படும்,' என்றனர். இதில் விவசாயிகள் சமாதானம் அடைந்து தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அறச்சலூரில் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com