புதரில் பதுக்கிய 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: பிரபல ரவுடிக்கு தொடர்பா?

புதரில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பிரபல ரவுடிக்கு இதில் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதரில் பதுக்கிய 3 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: பிரபல ரவுடிக்கு தொடர்பா?
Published on

திருச்சி,

திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் முட்புதருக்குள் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் பொன்மலை போலீஸ் உதவி கமிஷனர் காமராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் முட்புதருக்குள் ஒரு அட்டை பெட்டியில் 3 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நாட்டு வெடிகுண்டுகளை பாதுகாப்பாக மீட்டு ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். அதேபோல் தடய அறிவியல் நிபுணர்கள் அப்பகுதியில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவுடி பதுக்கி வைத்து இருந்தாரா?

அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் மீது அரியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் யாரையாவது மிரட்டுவதற்காக இந்த வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்து வரும் பிரபல ரவுடியை தேடி வருகின்றனர். ரவுடி பிடிபட்டால் தான், நாட்டு வெடிகுண்டுகளை அவர் பதுக்கி வைத்து இருந்தாரா?, அல்லது வேறு யாரேனும் பதுக்கி வைத்து இருந்தார்களா? எதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்து இருந்தார்கள் என்ற விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com