செக்கானூரணி காவல் நிலைய மரணம்: குடும்பத்திற்கு நிவாரணம், அரசு வேலை வழங்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

பாலகிருஷ்ணன் நவம்பர் 11-ம் தேதி அதிகாலை காவல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
பெ. சண்முகம்
Published on: 

சென்னை,

செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாலர் பெ. சண்முகம் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

வழக்குப்பதிவு

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த ரங்கப்பன் என்பவரின் மகன் பாலகிருஷ்ணன், தனியார் டெலிவரி நிறுவனத்திற்குச் சொந்தமான சாக்கு வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் கடந்த 3 ஆம் தேதி அதிகாலை, தேவாரத்தில் இருந்து மதுரைக்கு எலக்காய்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இவரது வாகனம் உசிலம்பட்டி-மதுரை சாலையில் வாலாந்தூர் கண்மாய்கரை அருகே தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ஏலக்காய் மூட்டைகள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், வாலாந்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக, சம்பவத்திற்குத் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்கும், விசாரணைக்கு உதவுவதற்கும் பாலகிருஷ்ணன் மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், பாலகிருஷ்ணன் நவம்பர் 11-ம் தேதி அதிகாலை காவல் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மயக்கமடைந்து கிடந்ததாகக் காவல்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். உடனடியாக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்; அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பாலகிருஷ்ணனின் இறப்பு குறித்து காவல்துறையினர் கூறும் தகவல்களை ஏற்க மறுத்து அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

அரசுப் பணி

பாலகிருஷ்ணனின் லாக்கப் மரணம் குறித்து காவல்துறை உரிய முறையில் விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. மேலும், உயிரிழந்த பாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் அல்லது புகார் அளிக்க வருபவர்கள் காவல்துறையின் அத்துமீறலால் உயிரிழக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காவலர்களை பணியிடை நீக்கம் செய்வதோடு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். மேலும், இனிமேல் இதுபோன்ற செயல்கள் நடைபெறாவண்ணம் காவல்துறையில் உரிய சீர்த்திருத்தங்கள் செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X