

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நேற்று நடந்த தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,346 பேர் எழுதினார்கள்.
எழுத்தறிவு கல்வி
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில் இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, தினமும் 2 மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்கு இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இவர்களுக்கான பாட திட்டத்தில், தமிழில் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
2,346 பேர் எழுதினர்
மேலும் கணித பாடம்மற்றும் உடல்நலம் காப்போம் பகுதியும், அவசரகால தொலைபேசி எண்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 236 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டன. இதில், 2,346 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.
மேலும் கல்வி அலுவலர்கள் தேர்வு மையங்களில் ஆய்வு செய்தனர்.