

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சின்னமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சஞ்சீவி (வயது 19). இவரது உறவினரான சவுந்தர்ராஜன் அதே கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவருடைய விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் ஏர் உழுது கொண்டு இருந்தார். அவருடன் சஞ்சீவியும் இருந்துள்ளார்.
சவுந்தர்ராஜன் சாப்பிடுவதற்காக டிராக்டரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அப்போது டிராக்டரில் இருந்த சஞ்சீவி டிராக்டரை இயக்குவது போன்று செல்போனில் செல்பி எடுத்து, தனது ஸ்டேட்டசில் வைத்துவிட்டு டிராக்டரை ஓட்டியிருக்கிறார்.
அப்போது தவறுதலாக ஓட்டியதால் டிராக்டர் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தலைகுப்புற கவிழ்ந்து நீரில் மூழ்கியது. டிராக்டரை ஓட்டிய சஞ்சீவியும் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுபற்றி தகவலறிந்த வாணியம்பாடி தீயணைப்பு துறையினரும் மற்றும் அம்பலூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 4 மின் மோட்டார்களை கொண்டு வந்து கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றி கிரேன் உதவியுடன் 4 மணி நேரத்திற்கு பிறகு சஞ்சீவியை மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். டிராக்டரும் மீட்கப்பட்டது.