போலி மற்றும் தரமற்ற மருந்துகள் விற்பனை: 6 பேருக்கு சிறை தண்டனை

6 பேர் மற்றும் 2 மருந்து வினியோக நிறுவனத்திற்கு மொத்தம் ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
போலி மற்றும் தரமற்ற மருந்துகள் விற்பனை:  6 பேருக்கு சிறை தண்டனை
Published on: 

தேனி.

போலி மற்றும் தரமற்ற மருந்துகள் விற்ற மருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் உள்பட 6 பேருக்கு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

போலி மருந்துகள்

மதுரை உரங்கான்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். இவர் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம், இவர் நடத்திய மருந்து தயாரிப்பு நிறுவனம் தடை செய்யப்பட்டது. இந்நிலையில், தேனியில் அதே ஆண்டு அக்டோபர் மாதம் தேனியில் உள்ள 2 மருந்து வினியோக நிறுவனங்களில் தேனி சரக மருந்துகள் ஆய்வாளர் சுடலை வேல்முருகையா ஆய்வு செய்தார்.

அங்கு ரகுநாதன் நடத்தி வந்த நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. மேலும், மதுரையை சேர்ந்த பிரித்விராஜ் என்பவர் நடத்தி வந்த நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட இருமல் டானிக் உள்ளிட்ட மருந்துகளும் இருந்தன. விசாரணை மற்றும் மருந்துகள் மீதான பகுப்பாய்வு முடிவில், ரகுநாதன் போலி நிறுவனம் பெயரில் மருந்துகள் தயாரித்து வந்ததும், பிரித்விராஜ் நிறுவனம் தயாரித்த மருந்துகள் தரமற்றவை என்றும் தெரியவந்தது.

7 ஆண்டுகள் சிறை

இதுகுறித்து ரகுநாதன், பிரித்விராஜ், தேனியை சேர்ந்த மருந்து வினியோக நிறுவன உரிமையாளர் ஈஸ்வரன், தேனியை சேர்ந்த மருந்து வினியோக நிறுவன பங்குதாரர் ரமேஷ் மற்றும் மருந்து வினியோகம், விற்பனையில் தொடர்புடைய தேனியை சேர்ந்த நவஜீவன், மதுரையை சேர்ந்த சிவக்குமார் ஆகிய 6 பேர் மீதும் 2 மருந்து வினியோக நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை முடிவில், ரகுநாதன், பிரித்விராஜ், ஈஸ்வரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரமேஷ், நவஜீவன், சிவக்குமார் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார். மேலும், அவர்கள் 6 பேர் மற்றும் 2 மருந்து வினியோக நிறுவனம் ஆகியோருக்கு மொத்தம் ரூ.19 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேல்முறையீடு

வழக்கில் கைப்பற்றப்பட்டு கோர்ட்டில் சான்று பொருட்களாக குறிக்கப்பட்ட மருந்துப் பொருட்களை, மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு முடிந்தபிறகு அல்லது மேல்முறையீடு இருந்தால் அது முடிவடைந்த பின்னர் அழிக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com