

விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் ரூ.76 லட்சத்துக்கு காய்கறி விற்பனை செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தி விழா
சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தைகளுக்கு விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைச்சல் அடைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி உழவர் சந்தைகளில் வழக்கமான நாட்களை விட நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வியாபாரிகளும் வழக்கத்தை விட கூடுதலாக காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் காய்கறி விற்பனை அமோகமாக இருந்தது.
ரூ.76 லட்சத்துக்கு விற்பனை
இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறும் போது, மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளுக்கு 894 விவசாயிகள் 197 டன் காய்கறிகளும், 38 டன் பழங்களும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ரூ.76 லட்சத்து 56 ஆயிரத்து 312-க்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் உழவர் சந்தைகளுக்கு 57 ஆயிரத்து 560 பேர் வந்து பொருட்கள் வாங்கி சென்றதாக தெரிவித்தனர்.
இதேபோல் சேலம் பால் மார்க்கெட், ஆற்றோர மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து மார்க்கெட்டுகளிலும் நேற்று காய்கறி, பழங்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது.