தமிழக அரசின் புதிய ஓய்வூதியத் திட்ட அறிவிப்புக்கு செல்வப்பெருந்தகை வரவேற்பு

கோப்புப்படம்
கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டாலும் அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டுகாலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் (Tamil Nadu Assured Pension Scheme - TAPS)" செயல்படுத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
இதன்மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டுகால போராட்டம் முடிவிற்கு வந்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்புகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை பெரிதும் வரவேற்றுள்ளது.
அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டாலும் அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்மூலம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகளுடன் உள்ள இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






