சென்னையில் சுகாதார அலுவலர்களுக்கான கருத்தரங்கு: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னையில் மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்களுக்கான கருத்தரங்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னையில் சுகாதார அலுவலர்களுக்கான கருத்தரங்கு: அமைச்சர் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

சென்னையில் மாவட்ட அளவிலான சுகாதார அலுவலர்களுக்கான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.

கருத்தரங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு மூலம் "அனைவருக்கும் அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு" திட்டம் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலக வங்கியின் உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.2,854.74 கோடி. இதில் உலக வங்கியின் பங்களிப்பு ரூ.1,998.32 கோடி (70 சதவீதம்) மற்றும் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு ரூ.856.42 கோடி (30 சதவீதம்) ஆகும். உலக வங்கி இதுவரை ரூ.1,219.08 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

செயல்பாட்டு ஆராய்ச்சி

தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டின், மாநில குற்றப்பிரிவு பதிவேட்டின்படி, 55 ஆயிரத்து 713 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 17 ஆயிரத்து 544 பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். மேலும் 14 ஆயிரத்து 912 பேர் இறந்துள்ளார்கள். இதனை தடுக்கும் பொருட்டு, முதல்-அமைச்சர் அவர்களால் 'இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும்-48 திட்டம்', மேல்மருவத்தூரில் கடந்த 2021-ம் ஆண்டில் டிசம்பர் 18-ந்தேதி தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் மற்றும் இந்திய தொழில் நுட்ப கழகம் (ஐ.ஐ.டி. சென்னை) இணைந்து செயல்பாட்டு ஆராய்ச்சி என்ற முன்னோடியான ஆராய்ச்சி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

சுற்றுச்சூழல் நெறிமுறைகள்

இந்த ஆராய்ச்சி திட்டத்தின் முதல் கட்டமாக 108 அவசர ஊர்தி சேவைகள், தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு (டி.ஏ.இ.ஐ.) சேவைகள், நோயாளிகளின் பாதுகாப்பு, அரசு ஆஸ்பத்திரிகளில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளின் பயன்பாடு, பெண்களை பாதிக்கும் புற்று நோய்களை கண்டறிவதில் உள்ள காலதாமதம் முதலியவை ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உறுதி செய்யும் "சுற்றுச்சூழல் நெறிமுறைகள்" குறித்த கையேடு இந்த கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com