

விழுப்புரம்,
சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன் இன்று ஆலம்பூண்டி கிராமத்தில் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி வடிவேலு-பவானி தம்பதியின் 2-வது மகள் ஹேமலதா (வயது7). கடந்த அக்டோபர் 11-ந்தேதி இரவு தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து தூங்கிய சிறுமி மறுநாள் 12-ந்தேதி அதிகாலை மாயமானார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. முதலில் சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், எந்த துப்பும் கிடைக்காதை அடுத்து கடந்த 21-ந்தேதி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் சரித்திர பதிவேடு குற்றவாளியை 4 முறை அழைத்தும் விசாரணை மேற்கொண்டனர். குழந்தை கடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணையை முன்னெடுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆந்திர, கர்நாடகா, கேரளா எல்லைகளில் உள்ள பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் உள்பட 5 ரெயில் நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அங்குள்ள கேண்டீன்களில் உள்ள ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிறுமி மாயமாகி ஒரு மாதத்தை தாண்டி விட்டநிலையில், சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கி இன்றுடன் 21 நாட்களை கடந்து விட்டது. ஆனாலும் இதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு, சிறுமி பற்றிய எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி., விக்ரமன் இந்த வழக்கு தொடர்பாக செஞ்சி ஆலம்பூண்டிக்கே வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. நேரில் விசாரணை நடத்த உள்ளதால் இந்த வழக்கில் ஏதாவது திருப்பம் கிடைக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.