செங்கோட்டை: தென்னை மரங்களை வேருடன் சாய்த்து காட்டு யானைகள் அட்டகாசம்

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விடுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
செங்கோட்டை: தென்னை மரங்களை வேருடன் சாய்த்து காட்டு யானைகள் அட்டகாசம்
Published on

செங்கோட்டை,

செங்கோட்டை அருகில் தமிழக-கேரளம் எல்லை பகுதியில் அமைந் துள்ள மேக்கரை கிராமத்தில் ஏராளமான விவசாய நிலங்கள், தோட்டங்கள் உள்ளன. இங்குள்ள மலைப்பகுதியில் யானை, பன்றி, குரங்குகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அவைகள் அவ்வப் போது மலையடிவாரத்துக்கு வந்து விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மேக்கரை கிராமத்தில் அப்பாச்சி என்பவருக்கு சொந்த மான தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன. அங்குள்ள தென்னை மரங்களை வேருடன் சாய்த்தன. நேற்று காலை அப்பாச்சி தனது தோட்டத்துக்கு வந்து பார்த்தபோது தென்னை மரங்களை யானைகள் நாசப்படுத்தியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தனியார் தோட்டங்கள் மலை அடிவாரத்தில் இருப்பதால் யானைகள் அடிக்கடி வந்து பயிர்களை சேதப்படுத்தி செல்கின்றன. மேலும் அங்கி ருந்து திடீரென ஊருக்குள்ளேயும் புகுந்து விடுகின்றன. இதனால் இரவு நேரங்களில் மேக்கரை கிராம மக்கள் வெளியே செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

தற்போது குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மேக்கரையில் அமைந்துள்ள தனியார் அருவிகளில் குளிப்பதற்காக அதிகளவில் வரத் தொடங்கி உள்ளனர். யானைகள் அடிக்கடி மலையடிவாரத்தில் இருந்து இறங்கி ஊருக்குள் புகுந்து விடுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே யானைகள் ஊருக்குள் வராமல் இருப்பதற்காக சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com