சென்னை ராஜாஜி நகரில் ரூ.11.88 கோடி செலவில் மூத்த குடிமக்கள் உறைவிடம்; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை கொளத்தூர் ராஜாஜி நகரில், 25,500 சதுர அடி கட்டிட பரப்பளவில் 75 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் உறைவிடம் கட்டப்பட்டுள்ளது.
சென்னை ராஜாஜி நகரில் ரூ.11.88 கோடி செலவில் மூத்த குடிமக்கள் உறைவிடம்; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
Published on

சென்னை

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டுமல்லாமல் சமூக நோக்கோடு செயல்படும் அறநிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. திருக்கோவில்களின் சார்பில் கல்வி நிறுவனங்கள், பயிற்சி பள்ளிகள், கருணை இல்லங்கள், மூத்த குடிமக்கள் உறைவிடங்கள், மனநல காப்பகம், மருத்துவ மையம் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.

2021–2022-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பில், “சென்னை, பழனி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களை பேணி பாதுகாக்க மூத்த குடிமக்கள் உறைவிடங்கள் அனைத்து வசதிகளுடன் தொடங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டதை நிறைவேற்றிடும் வகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் கடந்த 27.05.2025 அன்று திருக்கோவில்கள் சார்பில் கொளத்தூர், பழனி மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் மூத்த குடிமக்கள் உறைவிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

Also Read
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு இடையே ஈரானை தாக்கிய நிலநடுக்கம்
சென்னை ராஜாஜி நகரில் ரூ.11.88 கோடி செலவில் மூத்த குடிமக்கள் உறைவிடம்; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், அருள்மிகு தேவிபாலியம்மன் மற்றும் அருள்மிகு இளங்காளியம்மன் திருக்கோவில் சார்பில் 11.88 கோடி ரூபாய் செலவில் கொளத்தூர் ராஜாஜி நகரில் 25,500 சதுர அடி கட்டிட பரப்பளவில் 75 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்து, பார்வையிட்டு, மூத்த குடிமக்களிடம் அவர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த மூத்த குடிமக்கள் உறைவிடத்தில் நிர்வாக அறை, நல்ல காற்றோட்டம், போதுமான இடைவெளியுடன் குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய 10 படுக்கைகள் கொண்ட அறை 5 எண்ணிக்கை, 4 படுக்கைகள் கொண்ட அறை ஒன்று, 3 படுக்கைகள் கொண்ட அறை 7 எண்ணிக்கை கொண்ட தங்கும் அறைகள், நவீன சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், பல்நோக்கு அறை, முதலுதவி அறை, இயன்முறை மருத்துவம், அவசர சிகிச்சை உதவி மையம் மற்றும் இயன்முறை மருத்துவ அறை, பார்வையாளர்கள் அறை, நூலகம், சிறு பூங்கா, மனமகிழ் மன்றம், முடி திருத்தகம், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உறைவிடமானது 60 வயதிற்கு மேற்பட்ட, குடும்பத்தில் பராமரிக்க வசதி வாய்ப்பில்லாத மூத்த குடிமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதன் முழு பராமரிப்பிற்கான நிதியுதவியினை சென்னை, டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகின்றது.

இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, அ. வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com