

சென்னை,
சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி திடீரென நல்லகண்ணு தனது வீட்டில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் மாலையில் வீடு திரும்பினார்.
பின்னர், மீண்டும் சில மாதங்களுக்கு பின்னர் நல்லகண்ணுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
மேலும், மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டதால் நல்லகண்ணு வுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதாக ஆஸ்பத்திரியின் டீன் கூறினார். இதனையடுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் சிறிது மாதங்களுக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார். அவ்வப்போது அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நல்லக்கண்ணுவின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
வயது மூப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நல்லக்கண்ணுவின் உயிர் பிற்பகல் 1.55க்கு உயிர் பிரிந்தது. இந்த நிலையில், நல்லகண்ணுவின் மறைவிற்கு பல்வேறு மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதுபெரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ரா.நல்லகண்ணு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. இன்று காலைதான் அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று உடல்நலம் குறித்து விசாரித்து வந்தேன். மீள்வார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், அய்யா மரணமடைந்துள்ளார். அய்யாவின் மறைவுக்கு எஸ்டிபிஐ கட்சி தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது. வாழும் போதே வரலாறாகத் திகழ்ந்த ஒரு உன்னத மனிதரைத் தமிழ்நாடு இன்று இழந்து நிற்கிறது என்றால் அது மிகையல்ல.
அய்யா நல்லகண்ணுவின் மறைவு என்பது வெறும் ஒரு அரசியல் தலைவரின் மறைவு மட்டுமல்ல; அது ஒரு நேர்மையான சகாப்தத்தின் முடிவு. மிக இளம் வயதிலேயே நாட்டின் விடுதலைக்காகப் போராடி சிறை சென்றவர்; தன் வாழ்வையே நாட்டிற்காக அர்ப்பணித்த ஒப்பற்ற தியாகி ஆவார். 80 ஆண்டுகால நீண்ட பொதுவாழ்வில் ஒரு சிறு கரும்புள்ளி கூட இல்லாத மாசற்ற அரசியல்வாதியாகத் திகழ்ந்தவர். இன்றைய கால அரசியல் சூழலில் "நேர்மை" என்பதற்கு மறுபெயராகத் திகழ்ந்த பெருமைக்குரியவர் அவர்.
ஏழை எளிய மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை சமரசமின்றி முன்னெடுத்தவர். குறிப்பாக, தமிழகத்தின் இயற்கை வளங்களைச் சீரழிக்கும் மணல் கொள்ளைக்கு எதிராக அவர் நடத்திய சட்டப் போராட்டங்கள் வரலாற்றில் மிக முக்கியமானவை. மாற்றுக் கருத்துடைய அரசியல் தலைவர்களும் கூட அண்ணாந்து பார்க்கும் மிகச் சிறந்த ஆளுமையாக விளங்கியவர்.
இந்திய அரசியல் களத்தின் ஒரு சகாப்தமும், தூய்மையான பொதுவாழ்விற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவருமான ரா.நல்லகண்ணுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், சிபிஐ கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், நல்லகண்ணு காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது. சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், மிகவும் எளிமையான தலைவராகவும் விளங்கியவர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர்.
நல்லகண்ணு குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி ரா.நல்லகண்ணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
பொதுவாழ்க்கையில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கியதோடு, தன் வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அர்ப்பணித்திட்ட எளிமையின் சிகரம் ஐயா ரா.நல்லகண்ணுவின் மறைவு இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும்.
ரா.நல்லகண்ணுவை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
பாஜக மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவரும், எளிய மக்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்கான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவருமான, தகைசால் தமிழர் நல்லகண்ணுவின் மறைவு மிகுந்த மன வருத்தமளிக்கிறது.
சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டார். சமூகத்தில் நிலவிய சாதிய தீண்டாமைக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்தார். தனது இளம்வயது முதலே சமூகத்திற்காக வாழ்ந்து, தனது 101-வது வயதில் மறைந்துள்ள நல்லகண்ணுவைப் போற்றுவோம்.
அய்யாவை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.” என தெரித்துள்ளார்.
தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“சுதந்திரப் போராட்ட வீரர்.. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினர் மற்றும் தோழமைகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.” என தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) வயது மூப்பின் காரணமாக காலமானார் என்கிற செய்தி வேதனையை அளிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக விளங்கிய அவர், தமது வாழ்நாளில் எளிமையை கடைபிடித்து, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர். பொதுமக்களின் நலனுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கதிற்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்மாசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக நிர்வாகி அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“எளிமையின் சிகரம்! கொள்கைக் குன்றின் மறைவு!.. விடுதலைப் போராட்ட வீரரும், அரசியலில் தூய்மைக்கும், பொதுவாழ்வில் நேர்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த இடதுசாரி இயக்கத்தின் மூத்த பெருந்தகை, முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைகிறோம்.
தமிழகத்தின் நில உரிமைப் போராட்டங்கள் தொடங்கி, இயற்கை வளங்களைக் காக்கும் களங்கள் வரை தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்தவர். அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், எளிய மக்களுக்கும் ஒரே மாதிரியான மரியாதையையும் அன்பையும் தந்தவர்.
ஐயா நல்லக்கண்ணு அவர்களின் மறைவு என்பது ஒரு இயக்கத்தின் இழப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவர் விட்டுச் சென்ற நேர்மை மற்றும் எளிமை எனும் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாப்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இடதுசாரித் தோழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
“விடுதலைப் போராட்ட வீரர்!..விவசாயிகளின் தோழர்!..உழைக்கும் மக்களின் உரிமைப் போராளி!.. மாபெரும் தலைவர் - தோழர் ஆர்.நல்லகண்ணுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!
இந்திய விடுதலைப் போர் வீரராக பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்து, விவசாயத் தொழிலாளர்களுக்கான போராளியாக உருவெடுத்து, பாட்டாளிகளின் தோழராகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் - மாபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு காலமான செய்திகேட்டு, வார்த்தைகளில் சொல்லமுடியாத அளவுக்கு மனவேதனை அடைந்திருக்கிறேன்.
'பொதுவாழ்வில் நேர்மை' என்பதற்கு தோழர் நல்லகண்ணு என்றே தமிழக அரசியல் களத்தில் பொருள்! அந்தளவுக்கு தன்னலமற்ற, போராட்டங்கள் சூழ்ந்த, தியாகங்கள் மிகுந்த பொது வாழ்வை வாழ்ந்துகாட்டியவர் அவர்! கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அவருடைய தியாகப் பெருவாழ்வு, பொதுவாழ்வில் இருக்கும் அனைவருக்கும் நிகழ்காலப் பாடங்கள்!
தோழர் நல்லகண்ணுவின் இழப்பு தமிழக அரசியல் களத்திற்கு மட்டுமல்ல, இந்தியப் பொதுவுடமை அரசியல் களத்திற்கும், சமத்துவத்தைக் கனவு காணும் ஒவ்வொரு பட்டாளித் தோழனுக்கும் பேரிழப்பு! அவரை இழந்து வாடும் பொதுவுடமை இயக்கத் தோழர்களுடனும், அவருடைய குடும்பத்தினருடனும் என் ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாழ்வில் எவராலும் அழிக்க முடியாத தியாகத்தின் தடங்களை ஆழமாகப் பதித்துச் சென்றுள்ள பாட்டாளிகளின் தோழர் நல்லகண்ணுக்கு என் வீரவணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
இந்திய சுதந்திரப் பேராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், அனைத்துக் கட்சியினராலும் போற்றப்படக்கூடியவருமான தோழர் ரா. நல்லக்கண்ணு உடல் நலக்குறைவின்றி சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகளும், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக 25 ஆண்டுகளும் பதவி வகித்த பெருமைக்குரியவர். மக்களுக்கான பல போராட்டங்களில் கலந்து கொண்டு தன் வாழ்நாளின் ஒரு பகுதியை சிறையில் அனுபவித்தவர். சாதிய கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தவர் தோழர் நல்லக்கண்ணு. மிகச் சிறந்த பண்பாளர். எளிமை மற்றும் நேர்மையின் மறுவடிவமாக திகழ்ந்தவர். மக்களுக்கு தொண்டு செய்வதையே தொழிலாகக் கொண்ட மனிதப் புனிதர் தோழர் நல்லக்கண்ணுவின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. நாடு ஒரு மிகப் பெரிய தேசியவாதியை, பொதுவுடமைவாதியை இழந்துவிட்டது.
தோழர் நல்லக்கண்ணுவை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், பொதுவுடமை கட்சி நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர்.
தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், நூற்றாண்டு கண்ட முதுபெரும் அரசியல் தலைவருமான நல்லகண்ணு காலமானார் என்கிற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய திருநாட்டின் முதுபெரும் அரசியல் தலைவருமான ரா. நல்லகண்ணுவின் மறைவு அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். ஐயா நல்லகண்ணு அன்பானவர், அடக்கமானவர், பண்பாளர். பொது வாழ்வில் நேர்மை, எளிமை, தூய்மையை கடைபிடித்தவர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.