நாமக்கல்லில் செஞ்சி சிறுமி? - சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை

சிறுமி மாயமாகி 24 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கையில் எடுத்து இன்றுடன் 14 நாட்கள் ஆகிறது.
நாமக்கல்லில் செஞ்சி சிறுமி? -  சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை
Published on: 

செஞ்சி,

செஞ்சி சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர்கள் 13 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

சிறுமி மாயம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு-பவானி தம்பதியினரின் 2-வது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி (வயது 7). இவள் கடந்த 11-ந் தேதி மாலையில் தனது பிறந்த நாளை கொண்டாடி முடித்துவிட்டு இரவில் பெற்றோருடன் வீட்டில் படுத்து தூங்கினாள். மறுநாள் (12-ந்தேதி) அதிகாலையில் அவளை திடீரென காணவில்லை.

24 நாட்கள்

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் எந்தவித துப்பும் துலங்காததால் இவ்வழக்கு விசாரணை. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிறுமி மாயமாகி 24 நாட்கள் ஆன நிலையில், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கையில் எடுத்து இன்றுடன் 14 நாட்கள் முடிந்து விட்டது. இருப்பினும் இவ்வழக்கில் இதுவரையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

சந்தேக நபர்கள்

இந்நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வேல்முருகன், கீதா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர். இதில் சந்தேக நபர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு ஆலம்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களில் பணிபுரிபவர்களிடம் அந்த புகைப்படங்களை காண்பித்து விசாரணை நடத்தினர்.

13 லாரி டிரைவர்களிடம் விசாரணை

மேலும் சிறுமி மாயமான அன்று இரவு ஆலம்பூண்டி- செஞ்சி சாலையில் சென்ற நேஷனல் பர்மிட் கொண்ட லாரிகளை ஒட்டிய 13 டிரைவர்களை அடையாளம் கண்டு அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக வரவழைத்து அவர்களிடம் சிறுமி மாயமானது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி சரித்திர பதிவேடு குற்றவாளிகள். வடமாநில தொழிலாளர்கள், டிராக்டர் டிரைவர்கள் என விசாரணை வளையம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 24 நாட்களாகியும் இதுவரை சிறுமி குறித்து எந்த தகவலும் தெரியாததால் அவளது பெற்றோர்கள், உறவினர்கள், கிராம மக்கள் ஆகியோர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

நாமக்கல்லில் சிறுமி?

இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி மாயமான செஞ்சி சிறுமி ஹேமலதாவை, அக்டோபர் 29-ம் தேதி நாமக்கல் தத்தகிரி முருகன் கோவிலில் வயதான தம்பதியருடன் பார்த்ததாக கோனானூர் அங்கன்வாடி சமையலர் பவானி தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாமக்கல் சென்ற சிபிசிஐடி போலீசார், அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X