சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல்: சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2-வது நாளாக மீண்டும் கூடியது.
சென்னை,
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, கவர்னர் உரையை சபாநாயகர் மு. அப்பாவு தமிழில் வாசித்தார். அந்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை 2-வது நாளாக மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கு.பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தொடர்ந்து, மறைந்த தொழிலதிபர் அருணாசலம் வெள்ளையன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், முன்னாள் மக்களவை தலைவர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் மறைவுக்கும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் மு.அப்பாவு வாசித்து முடித்ததும் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள். அத்துடன் இன்றைய சட்டசபை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது. முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச இருக்கிறார்கள். விவாதத்திற்கு பதில் அளித்து வரும் 24-ந் தேதி (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச இருக்கிறார். அத்துடன் சட்டசபை கூட்டம் நிறைவடையும்.






