வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
வழக்கில் இருந்து விடுவிக்க கோரி  செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு
Published on: 

சென்னை,

வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வழக்குப்பதிவு

கடந்த 2011-2015 ஆம் ஆண்டுகளில் நடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறையின் பணி நியமனங்களை, பணம் பெற்றுக் கொண்டு நிரப்பியதாக மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 2,200-க்கும் மேற்பட்டோருக்கு எதிராக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஏற்க முடியாது

இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி என்.லோகேஷ்வரன் முன் கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, ஒவ்வொருவரும் அடுத்தடுத்து வழக்கு தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என்றும், குறிப்பிட்ட காலத்துக்குள் அனைவரும் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எப்போது மனுத் தாக்கல் செய்யப்படும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

எச்சரிக்கை

மேலும், தேவையின்றி வழக்கை இழுத்தடிக்கும் எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என்றும், விருப்பம்போல, மனு தாக்கல் செய்வதாக இருந்தால், ஜாமீனை ரத்து செய்துவிடுவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட குற்றம்சாட்டப்ப்டடவர்களிடம், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி எப்போது மனு தாக்கல் செய்ய உள்ளீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மனு தாக்கல்

அதற்கு, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, விரைவில் மனு தாக்கல் செய்யவுள்ளதாக பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவிற்கு காவல்துறை பதில் அளிக்க சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

X