செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா - மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்

செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் ராஜினாமா கடிதங்கள் ஏற்கப்பட்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த சூழலில், தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என்றும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் இருந்தது.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதன்படி செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வத்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவருக்கு மீண்டும் பால்வளத்துறை வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இருவரின் ராஜினாமா கடிதங்களும் ஏற்கப்பட்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் ஜாமீனா? அல்லது அமைச்சர் பதவியா? என சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இன்று அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






