செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2014-ம் ஆண்டு போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அப்போது, போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணி வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதோடு அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் செந்தில்பாலாஜி மீது 3 குற்றவழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இதே விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது வரை அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். செந்தில்பாலாஜி சிறையில் இருந்தபோதும் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் செந்தில்பாலாஜி தரப்பில் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில்பாலாஜி குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதத்தை பரிசீலித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை ஏற்றுக்கொண்டார். பின்னர், செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கவர்னருக்கு கடந்த 12-ந் தேதி பரிந்துரைத்தார். இந்த பரிந்துரை கடிதம் உள்துறை மூலம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கவர்னர், செந்தில்பாலாஜியின் ராஜினாமாவுக்கு ஒப்புதல் அளித்தார்.

இதற்கிடையே செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இதுதொடர்பான அந்த மனுவில், ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. செந்தில் பாலாஜிக்கு எதிரான பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை துவங்க தயாராக இருக்கிறோம். செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார். செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும். நீண்ட காலமாக சிறையில் உள்ளதாக கூறும் செந்தில் பாலாஜிதான், விசாரணையை தொடங்க விடாமல் தாமதப்படுத்துகிறார். ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com