செந்தில் தொண்டைமானின் துணிச்சலும், ஆபத்தில் உதவும் குணமும் போற்றத்தக்கது - அன்புமணி பாராட்டு

கோப்புப்படம்
தமது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தியர்களைக் காப்பாற்றிய செந்தில் தொண்டைமானை பாராட்டுகிறேன் என்று அன்புமணி கூறியுள்ளார்.
நேபாளம் காத்மண்டு கலவரத்தில் இந்தியர்களின் உயிர்களைக் காப்பாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டைமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நேபாளத்தில் தலைவிரித்தாடிய ஆட்சியாளர்களுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் போராட்டத்தின் போது, தலைநகர் காத்மண்டுவில் தீயிட்டு எரிக்கப்பட்ட தி ஹயாத் நட்சத்திர விடுதியில் சிக்கித் தவித்த இந்தியர்கள் 5 பேரை, அதே விடுதியில் தங்கியிருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் கவர்னருமான செந்தில் தொண்டைமான் காப்பாற்றியதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவரது துணிச்சலான செயலை நானும் பாராட்டுகிறேன்.
காத்மண்டு கலவரத்தில் எரிந்து கொண்டிருக்கும் விடுதியில் சிக்கித் தவிப்பவர்களைக் காப்பாற்றுவது மிகவும் ஆபத்தானது எனத் தெரிந்தும், விடுதி நிர்வாகத்தின் எச்சரிக்கையையும் மீறி, தமது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இந்தியர்களைக் காப்பாற்றி வெளிக்கொண்டு வந்த செந்தில் தொண்டைமானின் துணிச்சலும், ஆபத்தில் உதவும் குணமும் போற்றத்தக்கவையே. அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






