செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு..!

செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜி வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைப்பு..!
Published on

சென்னை,

சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று 2-வது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அதில் "சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிடிலும் புலன் விசாரணை செய்வது கடமை. குற்றத்தை கண்டுபிடிக்க, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, வழக்கு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது அமலாக்கத்துறையின் கடமையை மறுப்பதாகும்.

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம் தான். ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது. புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது

எந்த அழுத்தத்துக்கும் அமலாக்கத்துறை உட்படுவதில்லை. தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளையே கைது செய்ய விதி உள்ளது. அப்பாவிகள் கைது செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய இந்த கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை என வாதங்களை முன்வைத்தார்.

இந்நிலையில், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (14-ம் தேதி) ஒத்திவைத்து 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். பல மணி நேரமாக நீடித்த அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து, மேகலா தரப்பு பதில் வாதங்களுக்காக வழக்கு விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com