பொதுத்தேர்வுக்கு பிந்தைய செயல்பாடுகளுக்கு தனி இணையதளம்: சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் பெறுவதில் இணையதளம் பிரச்சினையானது.
பொதுத்தேர்வுக்கு பிந்தைய செயல்பாடுகளுக்கு தனி இணையதளம்: சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
Published on

சென்னை,

பொதுத்தேர்வு முடிவு வெளியான பிறகு மாணவ-மாணவிகள் தங்களுடைய விடைத்தாள்களை சரிபார்க்கவும், மறுமதிப்பீடு செய்யவும் விண்ணப்பிப்பதற்காக பொதுத்தேர்வுக்கு பிந்தைய செயல்பாடுகளுக்கான தனி இணையதளம் வருகிற 1-ந்தேதி (நாளை மறுதினம்) முதல் செயல்படத் தொடங்கும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் பெறுவதில் இணையதளம் பிரச்சினையான விவகாரத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கையை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கையில் எடுத்து இருக்கிறது. எந்தவிதத் தொழில்நுட்பக் கோளாறுகளும் இல்லாமல், வெளிப்படையான முறையில் மாணவர்கள் விண்ணப்பிக்க வழிவகை செய்யும் வகையில் இந்த இணையதளம் இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது.

மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 'Post-Result Activities portal' என்ற இணையப் பக்கத்தின் வாயிலாகத் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் எளிதாகச் சமர்ப்பிக்கலாம்.

இந்த செயல்முறை குறித்து மாணவர்கள், பெற்றோர் சந்தேகங்களை தீர்த்து கொள்ள 1800118004 என்ற எண்ணிலும், rsultcbse2026@cbseshiksha.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் எனவும் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் தனி இணையதள முகவரி குறித்து சி.பி.எஸ்.இ. நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com