பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - அரசாணை வெளியீடு

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்காக அமைக்கப்படும் தனி நலவாரியத்தில் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயன் பெறலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் - அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

தீப்பெட்டி தொழிலாளர்களுக்காக அமைக்கப்படும் தனி நலவாரியம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 11-ந்தேதி விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில், சுமார் 4 லட்சம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வகையில், அவர்களுக்கென தனியே ஒரு நலவாரியத்தை அரசு அமைக்கும் என்று அறிவித்தார்.

முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரை தலைவராகவும், அரசு பிரதிநிதிகளாக செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆகியோரும் அலுவல்சாரா உறுப்பினர்களாக, வேலையளிப்போர் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை சார்பான பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை சார்பான பிரதிநிதி மற்றும் தொழிற் கூட்டமைப்பின் பிரதிநிதி ஆகியோரும், தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி மற்றும் பிற தொழிற்சங்க பிரதிநிதி ஆகியோர் அடங்கிய வாரியம் அமைப்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். மேற்கூறிய ஆணைக்கிணங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள 62 ஆயிரத்து 661 பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்நலவாரியம் தொடங்கப்படும். இன்றைய தேதியில் 1,250 பட்டாசு தொழிற்சாலைகளும், 870 தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன.

இதில், ஏறத்தாழ 1 லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருவதாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் அமைக்கப்படவிருக்கும் புதிய நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து பயன் பெறலாம். இந்த நலவாரியத்தின் தலைமையிடம் சென்னையில் செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com