வரி ஏய்ப்பை தடுக்க வணிகவரி நுண்ணறிவு பிரிவு மூலமாக தொடர் வாகன தணிக்கை - தமிழக அரசு அறிவிப்பு

வரி ஏய்ப்பை தடுக்க வணிகவரி நுண்ணறிவு பிரிவு மூலமாக தொடர் வாகன தணிக்கை - தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில், வணிகவரித்துறை மூலம் பெறப்படும் வரி வருவாய் பெரும்பங்கு வகிக்கிறது. அரசுக்கு சேரவேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் உத்தரவிற்கிணங்க, வணிகவரித்துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துப்பணி குழுக்களை கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் வாகனங்களை தணிக்கை செய்யும் பணியை திறம்பட செய்வது போன்ற பல புதிய முயற்சிகள் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி கடந்த மே 9-ந்தேதி இந்த மாதம் 5-ந்தேதி வரை 4 வார கால கட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலமாக 46 ஆயிரத்து 247 வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 55 ஆயிரத்து 982 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டு 1,273 இனங்களில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வரி அல்லது அபராதத் தொகையாக ரூ.12.19 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயில் எவ்வித ஏய்ப்புகளும் இல்லாத வகையில் வசூல் செய்வதை உறுதிசெய்யும் வகையில் இதுபோன்ற தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com