வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமைப்படுத்த தீவிர நடவடிக்கை - மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்த மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.
வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமைப்படுத்த தீவிர நடவடிக்கை - மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அடையார் ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஹர்மந்தர் சிங் பேசியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள், கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தொற்று உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்ததால், சென்னையில் வைரஸ் தொற்று பரவுதல் வெகுவாக குறைந்துள்ளது.

தற்போது, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவசரத் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் எளிமையாக்கப்பட்டு, தகுந்த காரணங்கள் இருந்தால் உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி வருங்காலங்களில் சென்னையை நோக்கி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக, நேற்று முன்தினம் ஒரு நாளில் மட்டும் 18,853 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 18,823 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயண அனுமதி பெற்று வரும் நபர்களை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தொழிற்சாலை மற்றும் இதர அலுவலங்களின் வேலை காரணமாக வரும் நபர்களின் தகவல்களை அந்தந்த மண்டல அலுவலர்கள் சேகரித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் வியாபார ரீதியாக வெளி மாவட்டங்களுக்கு சென்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

அதேபோன்று அம்பத்தூர் மண்டலம், கிண்டி தொழிற்பேட்டை அமைந்துள்ள அடையாறு மண்டலம் ஆகியவற்றில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் வருகையும் அதிகரிக்கும். இதுதொடர்பான தகவல்களையும் சேகரித்து அவர்களையும் முறையாக தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், கூடுதல் போலீஸ் கமிஷனர் ஆர்.தினகரன், இணை கமிஷனர் பி.மதுசுதன் ரெட்டி, துணை கமிஷனர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com