சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது சரமாரி தாக்குதல் - டிடிவி தினகரன் கண்டனம்

கோப்புப்படம்
மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியிலிருந்த பயிற்சி மருத்துவர் மீது நோயாளி ஒருவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மருத்துவர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் உட்பட அனைத்துவிதமான ஆதாரங்களைத் தாக்கல் செய்தபின்பும் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறையால் அதிருப்தியடைந்த பயிற்சி மருத்துவர்கள் ஒன்றிணைந்து போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
பேரிடர் காலங்களில் தொடங்கி பெருந்தொற்று காலம் வரை தன்னுயிரைப் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது ஒட்டுமொத்த மருத்துவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
எனவே, சிவகங்கை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






