சேவைக் குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் பாலிசிதாரருக்கு ரூ.35,700 வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

கோவில்பட்டியைச் சேர்ந்த ஒருவர் பொதுத்துறை நிறுவனத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார்.
சேவைக் குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் பாலிசிதாரருக்கு ரூ.35,700 வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் பொதுத்துறை நிறுவனத்தில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். தனது வலது கண்ணில் ரெட்டினா சிகிச்சைக்காக திருநெல்வேலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துவிட்டு, அதற்கு பணம் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அந்த பணத்தை பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார்.

அதில் ஒரு பகுதியை மட்டும் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. மீதி பணத்தையும் தருமாறு கேட்டதற்கு பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது. இதைக் கண்ட நுகர்வோர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட மீதி மருத்துவ செலவுத் தொகை ரூ.15,700 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.10,000 வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.35,700ஐ இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com