

சென்னை,
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெயிலை சமாளிக்க தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், நற்பணி மன்றங்கள் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நீர் மோர்ப் பந்தல் அமைத்திட வேண்டும் என்று தவெக தொண்டர்களுக்கு அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான என்.ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தங்களது அன்றாடத் தேவைகளுக்காக வெளியே வருவோருக்கு, நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு, மக்களுக்கு அவசியம் தேவை.
இந்த வெக்கையைச் சமாளிக்க, கழகத் தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய்யின் அறிவுறுத்தலின்படி, தவெக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் பொதுமக்களின் தாகத்தைப் போக்கும் வகையில் நீர்மோர்ப் பந்தல்களைத் திறக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், மோர், குடிநீர், வெள்ளரிக்காய், நுங்கு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.