

மக்கள் நீதிமன்றம்
விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான ஆர்.பூர்ணிமா தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி சுபத்ரா, கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜசிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி (பொறுப்பு) ஜெயப்பிரகாஷ், கூடுதல் சார்பு நீதிபதி தமிழ்செல்வன், தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி, மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதிகள் பிரபாதாமஸ், வெங்கடேசன், எஸ்.சி., எஸ்.டி. சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்யஜோதி, மாஜிஸ்திரேட்டுகள் ராதிகா, அகிலா, அரசு வக்கீல்கள் சுப்பிரமணியன், நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
441 வழக்குகளுக்கு தீர்வு
இம்முகாமில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், நில அபகரிப்பு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள், சிவில் வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாடு வழக்குகள் உள்ளிட்டவை எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசமாக விசாரிக்கப்பட்டது. அதுபோல் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு வக்கீல்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர், வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு கண்டனர்.
இம்முகாமில் 2,900-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன் முடிவில் 441 வழக்குகள் சமரசமாக முடிக்கப்பட்டு ரூ.9 கோடியே 25 லட்சத்து 14 ஆயிரத்து 343-க்கு தீர்வு காணப்பட்டது.
இம்முகாமில் அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த தீர்த்தமலை என்பவர் கடந்த 2022-ல் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றபோது தனியார் பஸ் மோதியதில் ஒரு காலை இழந்தார். இவ்வழக்கை வக்கீல் பொன்கோபு எடுத்து நடத்தி வந்தார். இவ்வழக்கில் சமரச முறையில் தீர்வு காணப்பட்டு ரூ.24 லட்சத்துக்கு விபத்து காப்பீட்டு தொகை, பாதிக்கப்பட்ட தீர்த்தமலைக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முகாமிற்கான ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக உதவியாளர்கள், சட்ட தன்னார்வ தொண்டு உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதேபோல் திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய நீதிமன்றங்களில் 15 அமர்வுகள் கொண்ட நீதிபதிகள் வழக்குகளை சமரசமாக விசாரணை செய்தனர்.