தமிழகத்தில் 4-ம் தேதி முதல் கத்தரி வெயில்: கோடை மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வாளர் தகவல்

அக்னி நட்சத்திர காலகட்டத்தில் பகலில் 110 டிகிரி வரை கூட வெப்பத்தின் தாக்கம் பதிவாகும்.
தமிழகத்தில் 4-ம் தேதி முதல் கத்தரி வெயில்: கோடை மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வாளர் தகவல்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி சுட் டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் வேலூரில் 108 டிகி ரியை தாண்டி வெயில் பதிவாகியது. இதுபோல் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 105 டிகிரியை கடந்தும், சில இடங்களில் 100 டிகிரியை தாண்டியும் வெப்பம் கோர முகத்தை காட்டி வருவதை பார்க்க முடிகிறது.

இதன் தொடர்ச்சியாக கோடை காலத்தின் உச்சம் என்று கூறப்படக் கூடிய அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் கத்தரி வெயில் காலம் வருகிற 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் வெப்பம் கோரத்தாண்டவம் ஆடும். பகலில் கொளுத்தும் வெயிலால் இரவில் கடும் உஷ்ணத்தை உணர முடியும். பகலில் 110 டிகிரி வரை கூட வெப்பத்தின் தாக்கம் பதிவாகும்.

அந்த வகையில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தொடங்க இருக்கும் கத்தரி வெயில் காலம் இந்த ஆண்டு எப்படி இருக்கும்? என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் விளக்கம் அளித்தார்.

முதல் 2 வாரங்கள் கடல் சார்ந்த அலைவுகள் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு வருகிறது. வெப்பமண்டல காற்று குவிதல் வடக்கு நோக்கி பயணிக்க இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு கத்தரி வெயில் காலம் வெப்பமும், கோடை மழையும் கலந்த கலவையாகவே இருக்கும். கோடை மழை இயல்பைவிட அதிகமாகவே பதிவாகும்.

இதுமட்டுமல்லாமல், தென்மேற்கு பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே வருகிற 23-ந்தேதி முதல் 25-ந்தேதிக்குள் கேரளம் மற்றும் அதனையொட்டிய கர்நாடகா, தெற்கு ஆந்திராவில் தொடங்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. பருவமழைக்கு முந்தைய மழைப்பொழிவும் கோடை காலத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பருவக்காற்றை கொண்டு வரக்கூடிய காற்று சுழற்சி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி. புயல் போன்ற அமைப்புகள் உருவாகி மழையை கொடுக்கும்.

அதாவது, இம்மாதத்தின் முதல் வாரத்தில் மேற்கு, உள்மாவட்டங்களில் மழையும், 2 மற்றும் 3-வது வாரத்தில் தமிழ்நாட்டில் பரவலாக மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதுவும் இடி மின்னலுடன் கூடிய மழையாகவே இருக்கும். அதிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 4-வது வாரத்தில் பருவமழை தொடங்கிய பிறகு தமிழ் நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை பெய்யக் கூடும்.

ஆக கத்தரி வெயில் காலத்தில் கோடை மழை என்ற சாதகமான சூழலே தற்போதுவரை இருக்கிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுடன் மே மாத கணிப்பை ஒப்பிடுகையில் வெப்பம் காணப்பட்டாலும், கோடை மழை அதிகம் பதிவாகும் என்றே தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com