

மதுரை,
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் விவசாய வாழ்வாதாரமாக விளங்கும் வைகை அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில் மழைப்பொழிவு குறைவாக இருந்தபோதிலும் ஜூலை மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், வைகை அணை கட்டப்பட்டு 68 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது.
மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போது நீர் மட்டம் 21 அடியாக சரிந்துள்ளது. இதனால் அணையை ஆதாரமாக கொண்டு செயல்பட்டு வந்த பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், தேனி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு தற்போது குறைந்த அளவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டநிலை நீடித்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி வறண்டு பாளம், பாளமாக வெடித்து காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வழக்கமாக ஜூன் மாதத்தில் திறக்கப்படும் முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் வைகை அணையை நம்பியுள்ள மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரத்து 41 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கேரளம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முடியும் என்ற சூழல் நிலவி வருகிறது.
மேலும், 'சூப்பர் எல்நினோ' கால நிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யாமல் போக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளதாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பருவமழை கைகொடுத்து வைகை அணையின் நீர்மட்டம் உயருமா? அல்லது முதல்போக பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு தாமதமாகுமா? என்ற அச்சத்தில் தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.