வைகை ஆற்றில் கழிவுநீர்; 5 மாவட்ட கலெக்டர்களுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு

வைகை ஆற்றில் 5 மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் வாரந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வைகை ஆற்றில் கழிவுநீர்; 5 மாவட்ட கலெக்டர்களுக்கு கோர்ட்டு அதிரடி உத்தரவு
Published on

மதுரை,

மதுரை ஐகோர்ட்டு கிளையில் நாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. வைகையில் தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதகளில் கழிவுநீர் கலக்கிறது.

இதை தடுக்க நடவடிக்கை கோரி கடந்த 2021-ம் ஆண்டு ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தேன். மனுவை விசாரித்த நீதிபதிகள், வைகையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இந்த உத்தரவை முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே, தொடர்புடைய மாவட்ட கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நீதிபதி புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்கள் தலைமையிலான பல் துறை அரசு அதிகாரிகள் குழு, வைகை ஆறு பகுதியில் வாரம் தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆய்வின் அறிக்கையை 40 நாட்களுக்கு ஒரு முறை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஆறுகளை பாதுகாக்க மாநில அளவில் பொதுபணி துறை, வருவாய்துறை உள்ளிட்ட துறை செயலாளர்கள் அடங்கிய குழுவும் வைகை ஆறு மீட்பு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், வைகை அணையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 5 மாவட்ட கலெக்டர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com