

தூத்துக்குடி,
திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வீரராகவபுரம் முக்கிய சாலைப்பகுதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டைச் சேர்ந்த ஊர் வீரராகவபுரம். அந்த பகுதியில், பாதாள சாக்கடை உடைந்து கழிவுநீர் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அப்பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள கடுமையான அடைப்பு காரணமாக, கடந்த சில தினங்களாகவே கழிவுநீர் வெளியேறி வீரராகவபுரம் முக்கிய சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.
சாலையில் தேங்கியுள்ள இந்த அசுத்த நீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் பாதாள சாக்கடை அடைப்பைச் சீரமைக்க வேண்டும் என்றும், கழிவுநீர் வெளியேறுவதைத் தடுத்து தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என்றும் வீரராகவபுரம் பகுதி பொதுமக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.