

சென்னை,
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டது தொடர்பான வழக்கில் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட நடிகர் மற்றும் பா.ஜ.க ஆதரவாளரான எஸ்.வி.சேகர் சமீபத்தில் பெண் பத்திரிகையாளர்களை ஒருவரை இழிவுபடுத்தும் விதமாக கருத்து ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அவரின் அந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
இதையடுத்து எஸ்.வி.சேகரின் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர் போலீஸாரால் கைது செய்யப்படாமல் வெளியே இருந்து வந்தார். இந்நிலையில் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததையடுத்து எஸ்.வி. சேகர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் இன்று நேரில் ஆஜரானார். பின்னர் அவர் ஆஜரானதை தொடர்ந்து எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி, மீண்டும் ஜூலை 18-ந் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டது.