விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம்

தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம்
Published on

சென்னை,

சட்டசபையில் பாதாள சாக்கடை தொடர்பாக தி.மு.க. உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), அ.தி.மு.க. உறுப்பினர் மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), அம்மன் கே.அர்ஜுனன் (கோவை வடக்கு), உறுப்பினர் முத்துராஜா (புதுக்கோட்டை) ஆகியோர் கேள்வி எழுப்பினர். இதற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து கூறியதாவது:-

புதுக்கோட்டை நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் ரூ.131.90 கோடியில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் விரிவான ஆய்வு செய்யப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். படிப்படியாக அங்கு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்து உறுப்பினர் கேள்வி எழுப்பினார். சென்னையை ஒட்டிய பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே செங்கல்பட்டு பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முழுமையாக பணிகள் முடிக்கப்படும். இதேபோல் மதுராந்தகம் பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

பொதுவாக ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் கேட்கிறார்கள். மாநிலம் முழுவதும் பரவலாக அனைத்து மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும். அரசின் நோக்கமே அது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com