தலையணையால் அமுக்கி தையல் தொழிலாளி கொலை: மனைவி, கள்ளக்காதலனுடன் கைது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் படுக்கை அறையில் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தலையணையால் அமுக்கி தையல் தொழிலாளி கொலை: மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (வயது 28), தையல் தொழிலாளி. அவருடைய மனைவி கார்த்திகா(25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரவிக்குமார் திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள தையல் கடையில் அவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த ரவிக்குமார், சாப்பிட்டுவிட்டு தூங்கினார். மறுநாள் காலை (நேற்று முன்தினம்) படுக்கை அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திண்டுக்கல் தாலுகா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ரவிக்குமாரின் காது, வாயில் இருந்து ரத்தம் வழிந்தபடி இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவரது மனைவி கார்த்திகாவிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இதில் ரவிக்குமாரை, அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ரவிக்குமார் மனைவி கார்த்திகாவுக்கும், நத்தம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் விக்னேஷ்(23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். ஒரு கட்டத்தில் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் ரவிக்குமாருக்கு தெரியவந்தது. இதனால் அவர், கார்த்திகாவை கண்டித்தார்.

இந்தச் சூழலில் தான் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய முடிவு செய்த கார்த்திகா, இதுகுறித்து விக்னேசிடம் கூறினார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அதன்படி கடந்த 16-ம் தேதி இரவு ரவிக்குமார் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கார்த்திகா, தனது கள்ளக்காதலன் விக்னேசுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து வரவழைத்தார். விக்னேஷூடன் அவரது நண்பரான நத்தத்தை சேர்ந்த நாகராஜூம்(28) வந்தார்.

பின்னர் தூங்கிக்கொண்டிருந்த ரவிக்குமாரை, அவரது மனைவி கார்த்திகா, விக்னேஷ், நாகராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்தனர். மறுநாள் காலை தனது கணவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக கார்த்திகா நாடகமாடியுள்ளார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி கார்த்திகா, விக்னேஷ், நாகராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com