பாலியல் வழக்கு: மதபோதகர் ஜான் ஜெபராஜ் கேரளாவில் கைது


தினத்தந்தி 13 April 2025 9:19 AM IST (Updated: 13 April 2025 10:21 AM IST)
t-max-icont-min-icon

ஜான் ஜெபராஜுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.

சென்னை,

கோவையில் கிங் ஜெனரேஷன் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகராக இருப்பவர் ஜான் ஜெபராஜ். இவர், கடந்த 2004-ம் ஆண்டு மே 21-ந் தேதி கோவை, ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தன் வீட்டில் விருந்து வைத்துள்ளார். அதில் கலந்துகொண்ட 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த புகாரின் அடிப்படையில், மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து தனிப்படை அமைத்து ஜான் ஜெபராஜை போலீசார் தேடி வந்தனர். மேலும் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விடக்கூடாது என்பதற்காக அவருக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், ஜான் ஜெபராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ''நானும், என் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில் சிறுமிகளை வைத்து எனக்கு எதிராக பொய் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளேன். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மாட்டேன். எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். இந்த மனு வருகிற 15-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் கேரளா மாநிலம் மூணாறில் வைத்து அவரை கைது செய்தனர். மேலும் ஜான் ஜெபராஜை கோவை அழைத்து வரும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story