

கன்னியாகுமரி,
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிமன்றம் விதித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி கள்ளத்திவிளை பகுதியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 56). அவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருமணமாக ஒரு பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு 14 வயதில் சிறுமி உள்ளார். இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற ஹரிதாஸ், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார். பின்னர், சிறுமி தனது பெற்றோரிடம் இதனை கூறி அழுதுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஹரிதாசை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ நீதி மன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிதாசுக்கு 27 ஆண்டுகள் சிறையும் ரூ.82 ஆயிரம் அபராதமும் விதித்தார்.