8 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 26 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
8 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்: வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
Published on

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் விளாத்திகுளம் வேம்பார் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராபர்ட் கென்னடி மகன் தாமஸ் அற்புத ரகசியம் (வயது 20) என்பவரை சூரங்குடி காவல் நிலைய போலீசார் போக்சோ மற்றும் கொலை குற்றத்திற்கான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று (21.11.2025) குற்றவாளி தாமஸ் அற்புத ரகசியம் என்பவருக்கு (இயற்கையாக மரணம் வரும் வரை) ஆயுள் தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பெருமாள் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் மணிலெட்சுமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 26 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com