

சென்னை,
தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7-வது வழக்கும் புதிதாக பாய்ந்துள்ளது.
சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட புகாரில், தொழிலதிபர் 'ஜெம் கிரானைட்’ வீரமணி மீது ஏற்கனவே 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவற்றில் 4 வழக்குகள், போக்சோ வழக்காகும். அதில் 2 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கு, மதுரை போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்காகும்.
அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று, அவர் மீது 6-வதாக புதிய வழக்கு ஒன்றை, சிறப்பு புலனாய்வு போலீசார் பதிவு செய்தனர். 3-வது வழக்கிலும், அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நேற்று திடீரென்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், சிறப்பு புலனாய்வு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர். சோதனை விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. இதுவரை இந்த வழக்கில், வீரமணியால் பாதிக்கப்பட்ட 10 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வீரமணியின் வீட்டில் வேலை பார்த்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், உதவியாளர்கள் கணேசன், பாபு, டிரைவர்கள் லாசர், பார்த்திபன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சிறுமி ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட புதிய வழக்கில் ஜெம் வீரமணியை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மீது 7-வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவன தலைவர் வீரமணி மீது சென்னை காவல்துறையினர் மேலும் ஒரு போக்சோ வழக்கை பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குடன் சேர்த்து வீரமணி மீது இதுவரை 6 போக்சோ வழக்குகள் உள்பட மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.