7 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல்: வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்தது தொடர்பான போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு, வழக்குப்பதிவு செய்த 5 மாதத்தில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
7 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல்: வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை
Published on: 

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டத்தில், 7 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த வழக்கில் தொடர்புடைய வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

7 வயது சிறுமிக்கு பாலியல் தாக்குதல்; வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் அப்பு (வயது 28) என்பவர் 7 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் 14.5.2026 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, மேற்சொன்ன வாலிபரை கைது செய்தார்.

5 ஆண்டுகள் சிறை தண்டனை

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் நேற்று (6.10.2026) குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.

எஸ்.பி. பாராட்டு

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த நிதிமன்ற தலைமை காவலர் மாலதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினார்.

21 போக்சோ வழக்குகளில் 21 பேருக்கு தண்டனை

திருநெல்வேலி மாவட்ட போலீசாரின் தீவிர நடவடிக்கையால் இந்த ஆண்டில் மட்டும் இதவரை 21 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 21 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 5 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடரச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com