

சென்னை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் கயவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டுவர தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள் உள்ளிட்ட அனைத்து வகையான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தைக்கு 4 வடமாநிலத் தொழிலாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் சென்னையில் பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்ட மூதாட்டியை வடமாநில இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். அதற்கு முன்பும் சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த 2025-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவியை அதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அதே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், மதுராந்தகம் அருகே கடந்த மார்ச் 9, 2026 அன்று இரவு 16 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சென்னை அடையாறில் 22 வயது கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை நடைபெற்றது.
சென்னை தாரமணியில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர் ஒருவரின் மனைவியை போதையில் இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதைத் தடுத்த அப்பெண்ணின் கணவர், 2 வயது மகன் மற்றும் அப்பெண் ஆகிய மூவரும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதால் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைச் செய்ய சமூக விரோதி செயல்களில் ஈடுபடும் கயவர்களுக்கு ‘உரிமம்’ வழங்கப்பட்டுவிட்டதாக நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை எந்தப் பெண்ணும் பாதுகாப்பாக இல்லாத நிலை உருவாகியுள்ளது. எங்கும் நிறைந்திருக்கும் போதைப்பொருள் தாக்கத்தால் பெண்களும் பெண் குழந்தைகளும் தனியாக வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
இந்த சம்பவங்கள் அனைத்தும் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் குற்றச் செயல்களின் தொடர்ச்சியாகும். பொதுமக்கள் தங்கள் உயிருக்கு அச்சம் கொண்டு வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கயவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் தண்டனை வழங்க சட்டத் திருத்தம் கொண்டுவர தமிழக அரசு மத்திய அரசுக்கு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இத்தகைய கொடூர குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மீண்டும் நிலைநாட்டப்படும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.